தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
காக்கும் இமை நானுனக்கு EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
காக்கும் இமை நானுனக்கு EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 காக்கும் இமை நானுனக்கு

Go down 
AuthorMessage
Fathima hassan
Moderators



Posts : 5
Join date : 2010-09-22

காக்கும் இமை நானுனக்கு Empty
PostSubject: காக்கும் இமை நானுனக்கு   காக்கும் இமை நானுனக்கு EmptyMon Sep 27, 2010 9:11 pm

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.


புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?


ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.

"ஹிஹி! பாருங்கள் சார், முதலாளியான உங்களைப் போய்த் திருடன் என்று எண்ணி விட்டாள், இந்த முட்டாள் பெண். உங்களை என்னமாய் அவமானப்படுத்தி விட்டாள்! இவளை வேலையில் அமர்த்தியதே தப்பு."

"ஆமாம் சார். எப்போதும் ஒரே அதிகப் பிரசங்கித்தனம். இதைப் பண்ணு... அதைச் செய் என்று. நம் பாரம்பரியமே புரியாத படு முட்டாள்!" என்றவர் ஞானப்பிரகாசம், அடுத்த நிர்வாகி.

"முதலில், இவளை வெளியே துரத்த வேண்டும்" என்று முடித்தார் மூன்றாமவர்.

அதுதான் நடக்கப் போகிறது என்று எண்ணினாள் நளினி.

நியாயப்படி பார்த்தால், முதலாளி யார் என்று அறிந்திராதது மட்டும் தான் அவளது குற்றம். ஆனால், எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக, இரண்டு கூட்டாளிகளோடு இருந்த அவனைத் தன்னந்தனியாளாக, எப்படிப் பிடித்தாள்.

அதைப் பற்றி, எண்ணிப் பார்க்கக் கூட, யாருக்கும் மனமே இல்லையே.

ஆனால், இதைப் பற்றி வருத்தப்படுவதை விட, இனி என்ன என்று யோசிப்பது நல்லது.

அவள் யோசனையைத் தொடங்கு முன், 'சின்னப் பயல்' என்று, அந்தப் பழம் பெருச்சாளிகளால் அடிக்கடி குறிப்பிடப்படும் அந்த வளாகத்துடைய புதிய உரிமைக்காரன் செயல்படத் தொடங்கினான்.

பெயர் கூடப் பெத்த பெயர்தான். புவனேந்திரன்.

"கீழே தானே ஆலோசனை அறை? அங்கே போகலாம்" என்று எல்லோரையும் அங்கே அழைத்துச் சென்றான்.

அறையை அடைந்ததும், "அந்தப் பெண்ணை வெளியே இருக்கச் சொல்லுங்கள்," என்று நளினியை மட்டும் நிறுத்தி விட்டு, நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரி, அவனோடு வந்தவர்கள் என்று மற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

பூட்டிய அறைக்கு வெளியே, சற்று தொலைவில் ஒதுக்கமாக அமர்ந்திருந்த நளினிக்கு, நேரம் ஆக ஆக, வேலையில் நீடிப்பது பற்றிக் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும், காற்றில் இட்ட கற்பூரமாய்க் கரைந்து மறைந்து போனது.

முதலாளியின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள் பணியாளர்கள். அதிலும், கடைநிலை வேலையாட்களிடம் அது நன்றாகவே தெரியும்.

அதிகப்படி இருக்கைகள், தண்ணீர் போன்றவற்றுடன் ஆலோசனை அறைக்குள் சென்று வந்தவர்கள், அவளது பக்கமாகத் திரும்பியே பாராமல் சென்ற விதம், 'உன்னத'த்தோடு அவளுக்கு உள்ள உறவு முடியப் போவதைத் தெளிவாகவே தெரிவித்தது.

அவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும், அவளது முகத்தைப் பாராமலே, அவள் இருந்த இடத்தைக் கடந்து செல்லவும், நளினிக்குத் தன் தலைவிதி நிச்சயமாயிற்று.

சும்மாவே, மூன்று தளத்து நிர்வாகிகளுக்கும் அவளைப் பிடிக்காது!

புது முதலாளியின் ஒரு கருத்துக்காக வேலைக்கு அமர்த்தப் பட்டவள் என்பதற்காகவே, அவளை வெளியேற்றாமல் பொறுத்திருந்தார்கள்.

இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது விடுவார்களா?

இன்னும் என்னென்ன கோள் சொல்லி, அவளை விரட்டப் போகிறார்களோ?

அவர்களது கோள் மூட்டலுக்குப் பதில் சொல்ல ஒரு வாய்ப்புக் கூடத் தராமல், அவளை வெளியே நிறுத்தி விட்டுப் போய்விட்டானே புதிய முதலாளி!

இதிலிருந்தே அவனது நியாய புத்தியின் தரம் தெரியவில்லையா?

நிச்சயமாக வேலை போகப் போகிறது.



இதை, இவன் கூப்பிட்டுச் சொல்லும் வரை, காத்திருப்பானேன்?

பேசாமல், எழுந்து வீட்டுக்குப் போய்விட்டால், மறுநாள் வந்து சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டால் போகிறது.


இரவில் சரியாகத் தூங்காததால், மறுநாள் காலையில் வேலைக்குச் சென்ற நளினியின் கண்களில் சோர்வு தெரிந்தது.

மனதில் உற்சாகம் இருந்திருந்தால், அதை மறைக்க முடிந்திருக்கும்! ஆனால், அதை மறைக்க முயற்சி எடுக்கக் கூட, அவளுக்குத் தோன்றவில்லை.

முகம் முழுக்க உற்சாகத்தைப் பூசிக் கொண்டு நின்றாலும் தான் என்ன? 'உன்னத'த்தில் எல்லோருக்குமே, அவளது வேலை விவரம் தெரியும். எனவே அவள் சிரித்தாலும், அது வேஷம் என்று எல்லோருக்கும் தெரியும் தானே? அப்புறம் எதற்கு வீண் முயற்சி?

வீட்டில் தாய், தந்தை இருவருமே, இதில் வருத்தமாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு வேளை, அவளே வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், அதை அதிகப்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்களோ, என்னவோ.

"கௌரவமான இடம். வேறே மாதிரித் தொல்லை இராது என்று நினைத்தேன். ஆனால் இதே போல இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கும் தானே? சும்மா வேலை போனதை நினைத்து வருத்தப்படாதே, செல்லம்!" என்றாள் தாயார்.

"அங்கே எல்லாம் வயதானவர்கள் கூட்டம். கலந்து பேசிச் சிரிக்கக் கூட முடியாது. இனியாவது, உன் வயதுப் பிள்ளைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வேலையில் சேர். நானும், என் நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்," என்றார் தந்தை.

முதலாளி இளைஞன் தான் என்று சொல்லலாமா என்று யோசித்துவிட்டுச் சும்மா இருந்தாள் நளினி.

ஏனோ, அவனைப் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளை வேலையை விட்டு நீக்கியவனைப் பற்றி, அவளுக்கு என்ன பேச்சு?

வேலைக்குப் போய், ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்த்தால், அங்கே பூவலிங்கம் வந்து காத்திருந்தார்.

"கணக்குத் தீர்த்துப் பணத்தை வாங்கிக் கொண்டு போக வந்தேன்," என்றார் அவர் வருத்தத்துடன். "கணக்கு எல்லாம் போட்டாயிற்று. ஆனால், நீயும் வந்து அவரோடு பேசிய பிறகு பணத்தைக் கொடுக்கலாம் என்று முதலாளி சொல்லியிருக்கிறாராம்."

அவள் வந்து என்ன ஆகப் போகிறது. பேசியும் தான் என்ன? ஏற்கெனவே சொல்லாததாகப் புதிதாகச் சொல்லவும் தான் என்ன இருக்கிறது?

ஆனால், ஏதேனும் இருக்கக் கூடும் என்று பூவலிங்கத்துக்கு ஒரு நப்பாசை இருந்தது.

"என்ன நடந்தது என்று, உன்னிடம் தெளிவாகக் கேட்டறிய எண்ணுகிறாரோ என்னவோ? நீ கவனித்தாயா நளினிம்மா, கொஞ்சம் முன்னதாகத்தான், நான் மேல் தளத்திலிருந்து இறங்கிப் போனேன். முதல் தளத்துப் படியிறங்கும் போது, கீழே முதலாளி 'லிஃப்டில்' ஏறுவதைப் பார்த்தேன். கூடவே, அவருடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். அதனால் தான், யாரையாவது அனுப்பத் தேவை இல்லை என்று இருந்து விட்டேன்."

"அதை அவரிடம் சொல்லவில்லையா?"

"சொன்னேம்மா. ஆனால், முதலாளி அதை ஒத்துக் கொள்வதாக இல்லை. அவருடைய பாதுகாவலர்கள், அவரது காவலுக்காக மட்டும்தானாம். இங்குள்ள காவல் என் பொறுப்புதானாம்! அதற்காகத்தானே சம்பளம் வாங்கினாய் என்று கேட்கிறார்! இருபத்திரண்டு ஆண்டுகள் ஒரு பிழை இல்லாத பணி," என்று பெருமூச்சு விட்டார் பூவலிங்கம்.

"அதைத்தான் நானும் சொன்னேன்..." எனும்போதே, அவளுக்கு ஒரு குழப்பம். "அவருடைய பாதுகாவலர்கள் என்றீர்களே சார், உண்மையிலேயே அவர்கள் பழைய காலத்து ராஜாக்களுக்குப் போல இவருக்கு வெறும் பாதுகாவலர்கள் மட்டும் தானா? ஆனால் எதற்காக?" என்று வியப்புடன் கேட்டாள்.

"என்னவோ, பாதுகாப்பு விஷயத்தில், சின்னவர் கொஞ்சம் அதிகக் கவனம்தான். இங்குள்ள வீட்டை ஒரு கோட்டை போல ஆக்கிய பிறகுதான், வந்ததேயாம்..."

"பாட்டி வீடு. முன்னே பின்னே வந்ததே கிடையாது போலப் பேசுகிறீர்களே," என்றாள் அவள், நம்பாத குரலில்.

புவனேந்திரன் பேச்சில் காரண காரியம் சரியான விகிதத்தில் இருந்தது.

எனவே, அது பற்றிப் பாராட்டத்தான் வேண்டும்.

அத்தோடு, பூவலிங்கத்தின் துன்பம் தீர்ந்தது என்று, அது வேறு ஒரு பெரிய நன்மை விளைந்திருப்பது, இன்னமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஆனால், ஏதோ எதிர்பார்த்தது நடவாத ஏமாற்றம், அவளுள் ஏன் வந்தது?

ஒரு வேளை, அவள் சொன்னதற்காகவென்று புவனேந்திரன் பூவலிங்கத்துக்கு வேலை கொடுக்கவில்லை என்பதாலா?

என்ன பைத்தியக்காரத்தனம்!

இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பாக, அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண்ணின் பேச்சுக்காக மட்டுமாய்ச் செயல்படுவான் என்று அவள் எதிர்பார்த்தால், அது முட்டாள்தனம் அல்லவா?

இந்த மாதிரி அசட்டுத் தனங்களுக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த பிறகே, அன்று அவளால் உறங்க முடிந்தது.

ஆனால் மறுநாளே, தன்னுடைய இன்னோர் அசட்டுத் தனம் நினைவு வர, அலுவலுக்குச் சற்று முன்னதாகவே கிளம்பிச் சென்றாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, புவனேந்திரனும் முன்னதாகவே வந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றவள், அவனிடம் தன் வேலையைப் பற்றிக் கேட்டாள்.

பூவலிங்கத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய வேகத்தில் விட்ட வேலை. இப்போது, அவருக்கே வேலை மீண்டும் கிடைத்து விட்ட போது, அவளை எப்படி வெளியேற்றுவான்?

அவனும் அதையேதான் சொன்னான்.

"பூவலிங்கத்தின் வேலைக்காகப் பேசிய வேகத்தில்தானே, உன் வேலையையே விட்டாய். அவருக்கே வேலை கிடைத்து விட்ட பிறகு, உன் வேலை எப்படிப் போகும்? இடையில் நடந்ததை - எல்லாவற்றையுமே ரப்பரால் அழித்த மாதிரி - அடியோடு மறந்து விடு," என்றான் அவன்.

அவனது 'எல்லாவற்றையுமே' ஒன்றை உணர்த்த, "அவருக்கு வேலையைக் கொடுப்பதாக முடிவு பண்ணி விட்டு, என்...என்னிடம் ஏன் அப்படிக் கேட்டீர்கள்?" என்று உள்ளூர எரிச்சலுடன் வினவினாள் அவள்.

"உன்னைப் பற்றி மதிப்பிட முயன்றேன் என்று வைத்துக் கொள்ளேன்," என்று சிறு இறுக்கத்துடன் கூறி முறுவலித்தவன், அடுத்து, "ஆனால், இனியேனும் எதற்கும் அவசரப்பட்டுப் பேசாமல், இந்த இடத்துடைய அடுத்த உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கு," என்று ஆலோசனை என்ற பெயரில், அவளை அதிர வைத்தான்.

நிஜமாகவே நளினிக்குப் பேரதிர்ச்சிதான்.

தூக்கிவாரிப் போட, திகைப்புடன் அவனை நோக்கி, "எ...எ... என்ன சொன்னீர்கள், சார்? அடு...த்த உரிமையாளரா? ஏன்? நீங்கள்தானே உரிமைக்காரர்...? வேறு யார்?" என்று உளறிக் குழறி வினவினாள்.

"இப்போதைக்கு என்னுடையதுதான். ஆனால், நான் இதை விற்று விடும்போது?"

"விற்பதா? ஏன்? இப்போதுதானே உங்கள் கைக்கு வந்தது? அதற்குள் எதற்காக விற்பது?" என்று வியப்பும் கோபமுமாக மீண்டும் வினவினாள் அவள்.

அவனிடம் பணிபுரிகிறவள் என்கையில், இந்தக் கேள்வி அதிகப்பிரசங்கித்தனம்தான். ரொம்பவே. ஆனாலும், அவளால் கேளாதிருக்க முடியவில்லை.

லேசாகப் புருவங்களை உயர்த்திய போதும், நல்ல வேளையாக, அவனும் அவளைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நான் தொழில் நடத்துகிறவன், நளினி. லாப நஷ்டக் கணக்குப் பாராமல் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியாது. 'உன்னத'த்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் போதாது. கிட்டத்தட்ட லாபமே
இல்லை என்றே சொல்லலாம்."
Back to top Go down
Fathima hassan
Moderators



Posts : 5
Join date : 2010-09-22

காக்கும் இமை நானுனக்கு Empty
PostSubject: Re: காக்கும் இமை நானுனக்கு   காக்கும் இமை நானுனக்கு EmptyMon Sep 27, 2010 9:13 pm

இவனுடைய பாட்டியம்மாவைப் போல, இவன் கௌரவத்துக்கு இந்த வளாகத்தை நடத்தவில்லை. சரிதான். ஆனால் விட்டுவிட எண்ணுவதன் காரணமும் சரியில்லையே. லாபம் ஏன் இல்லை என்று யோசிப்பதை விட்டு...

எரிச்சலோடு, "லாபம் எப்படியிருக்கும்?" என்று வெடித்தாள் நளினி. "லாபம் வருவதற்குக் கடையில் விற்பனையும் நடக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி மகாராஜாக்களுக்கு மட்டும் கடை நடத்தினால், அதுவும் மகாராஜாக்களே இல்லாத இந்தக் காலத்தில் நடத்தினால், விற்பனை எங்கே நடக்கும்? லாபம் தான் எப்படி வரும்?" என்றாள்.

நிச்சயமாக அதிகப்படியான பேச்சுதான். ஆனால், அவன் எப்படி இதை விட்டுப் போகலாம் என்ற ஆத்திரத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதுவும், சீர் செய்யக்கூடிய ஒன்றைச் செய்து பாராமலே வெளியேறுவதா?

கண்ணில் சிரிப்புடன், "தலையில் கிரீடம் தரித்தால்தான் மகாராஜாவா? ரிலையன்ஸ், விப்ரோ, டாடா உரிமையாளர்களை எல்லாம் என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவாயாம்?" என்று கேட்டான் அவன்.

"மன்னர்களுக்கு நிகரான பணக்காரர்கள்தான். ஆனால் அவர்கள் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணுகிற அளவு தானே! அப்படியிருக்கும் ஒரு சிலருக்காக மட்டும்தான் கடை நடத்த வேண்டுமா?"

"பின்னே? நடைபாதையில் குவித்துப் போட்டு விற்பார்களே, அதுபோலச் செய்ய வேண்டும் என்கிறாயா?"

"இது அல்லது, அதுதானா? இரண்டுக்கும் நடுவே, மத்திய தரம் என்று ஒன்றும் கிடையாதா? அத்தோடு, இப்போதெல்லாம் நீங்கள் சொல்லுகிற ராஜாக்கள் குடும்பத்தாரே, எப்போதுமே, தகதகவென்று அணிந்து கொண்டிருப்பதில்லை, தெரியுமா? என்னோடு படித்தவள் ஒருத்தி, அவளது பிறந்த நாளைக்கு அவளைச் சுற்றுகிற பன்னிரண்டு பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள். அவள் அடிக்கடி அணிகிற உடை என்ன தெரியுமா? ஜீன்ஸ் பேன்ட்டும், டாப்ஸும்தான். விலை உயர்ந்ததும் இருக்கும். ஆனால், நீங்கள் இளக்காரமாகச் சொன்னீர்களே, அது போல நடைபாதைக் கடைகளில் அவள் பீராய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்! அவளுக்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு முக்கியம். அப்படித்தான் இப்போது எல்லோருமே பார்ப்பது."

"அப்படிப் பார்த்து வாங்க, இங்கே எதுவும் இல்லை என்கிறாயா?"

"பார்ப்பதற்கு இருந்து என்ன செய்வது? வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டுமே! இங்கே ஜவுளிப் பிரிவில், நான் வந்த நாளிலிருந்து ஒரு செட் துப்பட்டா துணிகளை நான் பார்த்து வருகிறேன். அவற்றில், ஒரு பீஸ் கூட விற்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால், விலை என்ன தெரியுமா? மீட்டர் ஆயிரத்து இருநூறு ரூபாய். இரண்டரை மீட்டர் என்றால், ஒரு துப்பட்டாவுக்கே, மூவாயிரம் ரூபாய் ஆகிவிடும். துப்பட்டாவுக்கே அவ்வளவு என்றால் அதற்குப் பொருத்தமான ஒரு சுரிதார் செட்டுக்கு, ஆரேழு ஆயிரங்களாவது ஆகும். இதே துப்பட்டாத் துணியை என்னிடம் கொடுத்தால் அந்த இரண்டரை மீட்டரில், லைனிங் கொடுத்து, அருமையான ஒரு சல்வாரையே தைத்துவிடுவேன். எந்தக் கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்திற்கும் அணிந்து செல்லக் கூடிய மாதிரியாய்ப் பிரமாதமாக இருக்கும். அதுபோல சல்வார் செட்டே கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு துப்பட்டாவுக்கு இந்த விலை கொடுத்து யார் வாங்குவார்கள்?" என்று, இந்த மூன்று மாத காலமாக அவள் எண்ணியதையெல்லாம், வேகமாகப் புவனேந்திரனிடம் கொட்டி முடித்தாள் நளினி.

அவன் குறுக்கிட, அவள் இடமே கொடுக்கவில்லை!

அவன் குறுக்கிட விரும்பியதாகவும் தெரியவில்லை.

புவனேந்திரன் யோசிப்பது போலத் தோன்றவும், தன் கருத்துக்களை மேலும் வலியுறுத்த விரும்பி, "பெரிய பெரிய பணக்காரர்கள் கூட, இப்போதெல்லாம் வீட்டில், உடல் சுகத்தைப் பார்த்துப் பருத்தி நூல் துணிகளைத்தான் அணிகிறார்கள் சார். எப்போதும் பட்டுத்தான் என்று பந்தாக் காட்டுகிற காலம், எப்போதோ முடிந்து விட்டது. என்ன, இவர்கள் ஒரு நாலு தரம் கட்டி விட்டுத் தூர வீசுவார்கள். மற்றவர்கள், கூடப் பத்துத் தடவை உடுத்துப் பழசான பிறகு, பாத்திரக்காரனுக்குப் போடுவார்கள். அவ்வளவுதான் சார், வித்தியாசம்," என்று மேலும் அடுக்கினாள்.

லேசாக முறுவலித்து, "நீ வேலை செய்ய வேண்டியது, விற்பனைப் பிரிவில் என்று தோன்றுகிறது. வாங்கப் பிடிக்கிறதோ, இல்லையோ, சுற்றி வளைத்துப் பேசி, நிச்சயமாகத் தலையில் கட்டி விடுவாய்," என்றான் அவன்.
"நான் சும்மா சொல்லவில்லை சார். ஒரு தரம் என்னோடு வந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்," என்றாள் அவள்.

அவன் பேசாதிருக்கவும், "அவசரப்பட்டு 'உன்னத'த்தை விற்று விட மாட்டீர்களே, சார்?" என்று கவலையுடன் கேட்டாள் நளினி.

அவன் பேசாதிருக்கவும் கலங்கி, "சார், இது உங்கள் தாத்தாவுடைய தந்தை தொடங்கியதாமே! அவருக்குப் பிறகு, உங்கள் தாத்தா பாட்டி தொடர்ந்து நடத்தியது. எழுபது ஆண்டுகளுக்கும் அதிகமாக, வெகு கம்பீரமாக நடந்து வருவது. விரைவில் வைர விழாவைக் கொண்டாடலாம். இப்படி ஒரு நிறுவனம், தொடர்ந்து நாலாவது தலைமுறையாக உங்களிடம் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அதைப் போய் விற்பதா?" அவனது மனதைத் தொட முயன்றாள் நளினி.

"இப்போதுதான், பாட்டி நடத்திய விதத்தைத் தொடர்வது சரியில்லை என்று வாதாடினாய். உடனேயே, பாரம்பரியத்தை விடலாமா என்று கேட்கிறாயே?"

ஒரு கணம் திகைத்துவிட்டு, "பாருங்கள் சார், உங்கள் கொள்ளுத் தாத்தாவின் உடை போலவா, நீங்கள் அணிகிறீர்கள்? அவருடைய பேரனான நீங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறவில்லையா? அதைப் போலக் கடையில் உள்ள பொருட்களை, இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றபடி, மாற்றலாமே என்றேன். நீங்களானால், வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தையே விற்கப் போகிறேன் என்கிறீர்களே, சார்," என்றாள் அவள்.

"வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தா? அப்படி என் கைக்கு வந்த இந்தக் குடும்பத்துச் சொத்தை நான் விரும்புவேன் என்று உனக்கு என்னம்மா, நிச்சயம்?"

புவனேந்திரனின் குரலில் லேசாக வெளிப்பட்ட கைப்பு, பூவலிங்கத்தின் பேச்சை நினைவுறுத்த, நளினிக்குச் சுரீலென்றது.

வழி வழியாக என்றால், அவனுடைய தந்தைக்கு இந்த 'உன்னதம்' கிடைக்கவில்லையே!

அவனுடைய பெற்றோரை ஒதுக்கிய பாட்டி வேறு வாரிசு இல்லாததால் மட்டுமே, அவனிடம் கொடுத்த சொத்தின் மீது, அவனுக்கு எப்படி ஈடுபாடு வரும்?

அந்த வெறுப்பும் சேர்ந்ததால் தான், இலகுவாக விற்றுவிட முடிவு செய்தானோ?

அப்படியானால், விற்றுவிட்டுப் போயே விடுவானா?

அவசரமாக யோசித்து, "ஆனாலும், ஒரு தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பாராமலே விட்டு விடுவீர்களா? பெரிதாகத் தொழில் நடத்துகிறவன் என்று சொல்லிக் கொண்டீர்களே. ஒரு தடவை, ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பாருங்கள், சார். நான் சொல்லுகிற மாதிரித் துணிகளில் விற்கிற இடங்களில் கூட்டம் எப்படி அலை மோதுகிறது என்று நீங்கள் நேரில் பாருங்கள், அப்போதுதான், நான் சொல்வது உங்களுக்குப் புரியும்," என்றாள் அவள் - குரலில் சிறு மன்றாடலுடன்.

"ம்ம்ம்..." என்று புவனேந்திரன் யோசிக்கும் போதே, "கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டாம் சார்," என்றான் அவனுடைய காவலர்களுள் ஒருவன்.

"ஆமாம் சார். அவர்கள் சொல்கிற மாதிரி, கூட்டம் அலை மோதுகிற இடங்களில், கண்டபடி மேலே வந்து விழுவார்கள், சார். அவர்களை யார் என்ன என்று கண்டு ஒதுங்கவோ, விலக்கவோ முடியாது," என்றான் மற்றவன்.

தன் காதுகளையே நம்ப முடியாத அளவுக்கு, நளினிகு ஆச்சரியமாகிப் போயிற்று.

உத்தமப் பெண்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட, கூட்ட நெரிசல்களில் மேலே இடிப்பவர்களைச் சிறு எரிச்சலோடு அலட்சியப்படுத்துகிற காலம் இது! ஆண் பிள்ளையான இவன் மீது அடுத்தவர்கள் பட்டு விடுவார்களே என்று, அங்கே போகாதே, இங்கே செல்லாதே என்று ஆலோசனை கூறப்படுகிறதே!

அதுவும் அவனிடம் பணிபுரிகிறவர்களே ஆலோசனை கூறுகிறார்கள்.

புவனேந்திரனும், அதை ஏற்று, அது பற்றிச் சிந்திப்பதாகவும் தோன்றவே, அவளுக்கு இன்னமும் ஆச்சரியமாகிப் போயிற்று!

இந்தப் பாதுகாவலர்கள், இந்த ஆலோசனை, சிந்தனை ஏன்?

ஆனால், அதைப் பற்றி விசாரிப்பதை விட முக்கியமாக விஷயம் வேறு இருக்கிறது. நூலையும், துணியையும் மொத்த உற்பத்தி செய்கிறவனுக்குப் பொருட்களின் சில்லறை விற்பனை பற்றிக் கற்றுக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

எனவே அவனுக்குச் சரியாக, "சரி சார். கூட்ட நேரத்தில் போக வேண்டாம். காலை பத்து மணிக்குப் போனால், எந்தக் கடையிலும் கூட்டமே இராது. நாளை காலை வாருங்கள், போய்ப் பார்க்கலாம்," என்று அழைத்தாள்.

"மறதி, மறதி. நாளை ஞாயிற்றுக்கிழமைம்மா. கடைகள் மூடியிருக்குமே."

"ஒன்றும் மறக்கவில்லை. உங்கள் 'உன்னதம்' மட்டும் தான், பழைய காலத்து வழக்கப்படி, ஞாயிற்றுக்கிழமை மூடியிருப்பது. இப்போதெல்லாம், பெரும்பாலும் ஆண் பெண் இருவருமே வேலை செய்து சம்பாதிப்பதால், 'சண்டே ஷாப்பிங்' என்று, ஞாயிறன்றுதான் கடைகளில் அதிக விற்பனை. ஆனால், வாரம் முழுவதும் வேலை செய்த இறுக்கம் தளரக் காலையில் சற்று ஓய்வாக வீட்டில் இருந்துவிட்டுத் தாமதமாகக் கிளம்புவார்கள். அதனால் தான், காலையில் கூட்டமிராது."

சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான் அவன். "நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாயே," என்றான் பாராட்டுதலாக. "அங்கே எல்லாம் உற்பத்தித் துறையில் இருப்பதால், இது போன்ற விவரங்கள் புதிதாக இருக்கிறது!"

வாயால் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவனது உடை, பெல்ட் போன்றவற்றை, ஒரு தரம் பாராதிருக்க நளினியால் முடியவில்லை.

அதைக் கவனித்து, "உடை, என் வீட்டுக்கு வந்து, அளவெடுத்துத் தைத்து வருவது. அவர்களே பொருத்தமாக மற்றவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். கொஞ்சம் அதிகச் செலவாகும். ஆனால், இவற்றுக்காக நான் வெளியே அலைந்து திரிய நேராது," என்று அவனது வழக்கமான சிறு முறுவலுடன் கூறினான் அவன்.

வெளியே அலைந்து திரிய நேராதிருப்பதற்காக, அதிகம் செலவு செய்கிறானா? நாலு பொருட்களைப் பார்த்து, நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதே ஒரு சுகம் என்று இவனுக்குத் தெரியாதா? நேரம் இல்லையா? பிடிக்கவில்லையா? அல்லது...

மீண்டும் நளினிக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று.

பலமுறை யோசித்தும், அது என்னவென்று, நளினிக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், மறுநாள் குறிப்பிட்ட இடத்தில், புவனேந்திரன் அவளுக்காகக் காத்து நிற்பதைப் பார்த்தபோதோ, உறுத்தல் பற்றிய நினைவே மறந்து போயிற்று.





கிட்டத்தட்ட புவனேந்திரனின் 'உன்னத'த்தின் அளவிலேயே அமைந்திருந்த, சில பெருங்கடைகளை அவனுக்குக் காட்டிவிட்டு, ஒன்றின் உள்ளே நளினி அவனை அழைத்துச் சென்றாள்.

வாங்குவோரின் பணப்பைக்குத் தக்கபடி, என்னென்ன மாதிரித் துணி வகைகள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டினாள். தைக்காத துணிகள், தைத்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள்... எல்லா வகையிலும், விலை குறைந்தது, கூடியது எல்லாமே இருப்பதையும், சின்னச் சின்ன அலங்கார வேலைகளுக்கு ஏற்றபடி விலை கூடுவதையும் எடுத்துக் காட்டி விளக்கினாள்.

சலிக்காமல் காட்டிய விற்பனைப் பெண்ணுக்காகத் தனக்கு ஒரு சல்வார் செட்டையும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், பில் போடப் போனபோது, புவனேந்திரன் பணம் கொடுக்கவும், அதைத் தடுக்க முயன்றாள்.

ஆனால், "இது உன் ஞாயிறு ஓய்வைத் தியாகம் செய்து 'உன்னத'த்துக்காகப் புரிந்திருக்கும் அதிகப்படிப் பணி. அதனால், இந்தச் செலவு கணக்கு 'நிறுவனத்'தைத்தான் சார வேண்டும்," என்று முடித்துவிட்டான் அவன்.

ஆடைகளுக்கேற்ற விதமாய், விலை குறைந்த 'காஸ்ட்யூம்' நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, "கூட்டம் அதிகமாகிறது, பாஸ்," என்று பாதுகாவலர்களில் ஒருவன் வந்தான்.

உடனேயே, "கிளம்புவோம்," என்று புவனேந்திரன் சொன்னது, நளினிக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ஆனால், காரை நிறுத்திவிட்டு வந்த இடத்தைப் பார்த்ததும், "பார்த்தீர்களா, சார்? இந்தக் கார் நிறுத்துமிடம் நிரம்பிப் போயிற்று. உங்களது போல, டயோட்டா, பென்ஸ், ஸ்கோடா போன்ற வண்டிகள் கூட எத்தனை நிற்கின்றன, பாருங்கள். நிறுத்த இடம் இல்லாமல், இடம் தேடிச் சுற்றுகிறவை எத்தனை! இந்த மாதிரிக் கார்களில் வருகிற... உங்கள் பாஷையில், தலையில் மகுடம் வைக்காத மகாராஜாக்கள்! அவர்களும் கூடத் தங்களுக்குத் தேவைப்பட்டவைகளை வாங்க, இங்கே தானே குழுமுகிறார்கள்," என்று தன் கூற்றுக்கு, அவள் மேலும் ஆதாரம் காட்டவும், புவனேந்திரன் வாய்விட்டுச் சிரித்தான்.

"உன் கருத்தை மற்றவர்கள் மீது எப்படித் திணிக்கிறாய் என்பது, மற்றெல்லாவற்றையும் விட, மிக நன்றாகத் தெரிகிறது. பா...வம், அப்புறமாய் மாட்டிக் கொள்ளப் போகிற அந்த அப்பாவி!" என்று மீண்டும் நகைத்தான் அவன்.

எதற்காக, இதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்று, அவளுக்கே புரியவில்லைதான். அவனது தொழில். அவன் நடத்துகிறான். அல்லது, மூடுகிறான். இதில், அவளுக்கென்ன வந்தது?

என்னதான் வந்ததோ? ஆனால், புவனேந்திரன் இந்த 'உன்னத'த்தை வெற்றிகரமாக நடத்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தை அவளால் விட முடியவில்லை என்பது நிச்சயம்.

அவனது கேலிப் பேச்சில் முகம் சிவந்த போதும், சமாளித்துக் கொண்டு, "அப்படியானால், நான் சொன்னதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமா, சார்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

முறுவலோடு, காரில் ஏறிக் கொள்ளுமாறு சைகை செய்தான் அவன். "உன்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போகிறேன்."

"இல்லை சார். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது."

"வேலை? என்ன வேலை?" என்று கேட்டவன், "சொல்லக் கூடாதது என்றால், வேண்டாம்," என்று சேர்த்துச் சொன்னான்.

அவள், தன் பெரிய கைப்பையைத் திறந்து, உள்ளிருந்தவற்றை எடுத்துக் காட்டினாள்.

அலங்கார வேலைகள் செய்திருந்த பல துண்டுத் துணிகள். "சில கடைகளில் ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கிறேன், சார். 'உன்னத'த்திலும் இதைக் காட்ட வந்த போதுதான், 'விண்டோ டிஸ்ப்ளே' செய்கிறாயா என்று, இப்போதைய பணியைத் தந்தார்கள்," என்று, விவரமும் தெரிவித்தாள்.

"ஓ! அதனால் தான், குந்தன், சிக்கான் என்று அப்படி அடுக்க முடிந்ததா? குட்," என்றான் பாராட்டுதலாக. "போய், உன் வேலையைப் பார். நான் கிளம்புகிறேன்."

"ஆனால்... சார்... இன்னமும், நீங்கள் ஒரு முடிவும் சொல்லவில்லையே?"

"நிஜமாகவே, அந்த அப்பாவி ரொம்பவே பாவம்தான்!" என்று மீண்டும் முறுவலித்தான் அவன். உடனேயே "யோசிக்கிறேன், நளினி. நீ சொன்னது, என்னைக் கூட்டி வந்து இங்கே கடைகளில் காட்டியது அனைத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். இப்போதைக்கு என் பதில் இதுதான். ஓகே! பிறகு சந்திப்போம்," என்று விட்டுக் கிளம்பினான் புவனேந்திரன்.

ஆனால், அந்தப் 'பிறகு சந்திப்போ'மின் பொருள், மறுநாள் அலுவல் அறையில் சந்திப்பது அல்ல, அவன் ஊரை விட்டுச் சென்று, திரும்பி வந்த பின் சந்திப்பது என்று வேலைக்குச் சென்றதும் அறிய வந்தபோது, அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஊருக்குப் போவதாகத் தன்னிடம் அவன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், அவளது ஏமாற்றம், வருத்தம் பற்றி யாரிடம் சொல்வது?

மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனாலும், சகஜமாகப் பேசிப் பழகும் பெற்றோரிடம் கூட, இதைப் பற்றிச் சொல்ல, நளினிக்குப் பிடிக்கவில்லை.

நிலைமை புரியாமல், அவளைத் தேற்றுவதாக எண்ணி, யாரேனும் ஏதேனும் சொன்னால் எரிச்சல் வரும்.

ஆனால், இரண்டு நாட்கள் கவனித்து விட்டு, "என்னடா செல்லம்?" என்று விவரம் கேட்ட தாயிடம், உண்மையைச் சொல்லாதிருக்கவும் அவளால் முடியவில்லை.

"அருமையான இடம், அம்மா! வீணாக விட்டு விடுவார்களோ என்று கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது," என்றாள் மகள்.

"அப்படி விட்டு விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நளினிம்மா! தொழில் நடத்துகிறவன் என்று தன்னைத் தானே சொல்லியிருக்கிறார், என்கிறாய். வளாகத்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் வேண்டும் என்பதுதானே, அவரது விருப்பமும். யோசி. ஞாயிறன்று கடை காட்டக் கூட்டிப் போனாய் என்று ஆயிரம் ரூபாய் சல்வார்க்குப் பணம் கொடுத்தாரே, தொடர்ந்து நடத்துகிற எண்ணம் இல்லாவிட்டால், அந்தப் பணம் அவருக்கு விரயம் தானே! அப்படி வீணாக்குவாரா? நீதானே பிடிவாதமாய் வரச் சொன்னாய், உன் பாடு என்று சும்மா இருந்திருக்க மாட்டாரா? அவரது இருப்பிடம் கோவை என்று தானே சொன்னாய்? அங்கே அவருக்கு வேலை இருந்திருக்கலாம், போயிருப்பார். எனக்கென்னவோ, நீ சொன்ன வழியில் ஒரு பிரமாதமான திட்டத்தோடு மிஸ்டர் புவனேந்திரன் திரும்பி வருவார் என்று தான் தோன்றுகிறது!" என்று சகுந்தலா நிச்சயமாகக் கூறவும், நளினிக்கும் போன உற்சாகம் திரும்பியது.

அவளுடைய அன்னை சொன்னது சரிதானே!

'உன்னத'த்தைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால், அந்த ஆயிரம் ரூபாய் அவனுக்கு வீண் தானே? விட்டுப் போகிறவன், அது வேறு செலவு ஏன் செய்ய வேண்டும்? தொடர்ந்து நடத்துவதானால், இது ஒரு நல்ல முதலீடு! இவ்வளவு நியாயமாக நடந்தானே என்று, அவளும் விசுவாசமாக இருப்பாள்.

"நீங்கள் சொன்னது கரெக்ட், அம்மா," என்றாள் அவள், குதூகலம் பெருக.

நளினியின் எதிர்பார்ப்பு நனவாக, விரைவிலேயே, புவனேந்திரன் திரும்பி வந்து விட்டான், ஒரே வாரத்தில்!

வந்து, தன் உடனடி வேலைகளை முடித்ததும், நளினியைக் கூப்பிட்டுப் பேசினான்.

"நீ சொன்னதை யோசித்துப் பார்த்தேன், நளினி. அதன்படி, நம் வளாகத்தின் விற்பனைப் பொருட்களை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்," என்றான் அவன்.

முகம் மலர, "அப்படியானால், தொடர்ந்து நடத்தப் போகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள் அவள்.

"வேறு வழி? இதை நடத்தாமல் விட்டு விட்டால், என் காதைப் பிடித்து முறுக்கி விரட்ட நீ கோவைக்கே வந்து விட மாட்டாயா? அந்தப் பயம்தான்."
முதலாளியின் காதைப் பிடித்து முறுக்குவதா?

"சா...ர்...!" என்றாள் அவள் திகைப்புடன்.

அவன் நகைத்துவிட்டு, "அந்த அளவுக்குப் போக மாட்டாய்தான். ஆனால், நீ என்னிடம் வலியுறுத்தவில்லை என்று சொல்ல முடியாதுதானே?" என்று இலகுக் குரலில் கூறியவன் தொடர்ந்து, "நீ வாதாடியதில் ஒன்று சரிதான், நளினி. தொழிலில் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பார்க்காமல் விடுவது, தப்புதான். அத்தோடு, என் இயல்புக்கு, அது பொருத்தம் இல்லாதது கூட! அது எப்படியோ நேர்ந்தது. போகட்டும். இப்போது..." என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தவனின் பேச்சு ஒரு கணம் நின்றது.

"ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரியும் போலத் தோன்றுகிறது!" என்றான் ஒரு மாதிரிக் கண்டனக் குரலில்.

புவனேந்திரனின் எரிச்சலையும் நளினியால் புரிந்து கொள்ள முடிந்தது. யாருக்குத்தான் அவர்களது வாழ்க்கை பொது விஷயமாக அலசப்படுவது பிடிக்கும்?

"'உன்னதம்' வம்பு மடம் அல்ல, சார். ஆனால், ரகசியம் என்றும் எதுவும் இராது. அதிலும், முதலாளியின் விஷயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பது இயல்புதானே!" என்றாள் அவள், சமாதானமாக.

"ஆனால், என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும், பேசுவதற்கு?" என்றான் அவன் கடுமையான குரலில்!

ஆனால், உடனேயே முகம் மாறி, "சரி சரி, போகட்டும். உன்னை வரச் சொன்ன காரணத்தைப் பார்ப்போம்," என்றவன், மேஜை மீது இருந்த சில ஃபைல்களைக் காட்டிப் "பிரித்துப் பார்! அங்கே கோவையில் உள்ளவை, அகில இந்திய அளவில் உள்ளவை என்று சில நிறுவனங்களில் இருந்து, அவரவர்களின் மாதிரிகளை வரவழைத்தேன். துணிகள், ரெடிமேடுகள் எல்லாமே! முதலில் ஜவுளியில் தொடங்குவோம். பிறகு, எல்லாவற்றிலும் கொண்டு வருவோம். இவற்றுள், நம் வளாகத்துக்கு ஏற்றவை எதெது என்று தேர்ந்தெடுத்துக் கொடு. உடனேயே ஆர்டர் கொடுத்து விடலாம்," என்று அவளை அவசரப்படுத்தினான்.

உற்சாகத்துடன் ஃபைல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை நின்றுவிட, "நா...னா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் நளினி.

"நீயேதான்! குறைந்த பட்சமாகத் துணி விஷயம் நீதான் தெரிவு செய்ய வேண்டும். உனக்கு அதில் விஷய ஞானம் இருக்கிறது. கூடவே, ஆர்வமும் இருக்கிறது!" என்றான், புவனேந்திரன்.

அவளால் முடியும் தான். கூடவே ஆசையும் இருந்தது. ஆனால்...

சற்று யோசித்துவிட்டு, "அது முடியாதே சார்," என்றாள் நளினி.

"ஏன்? ஏன் முடியாது?"

"கடைக்குப் பொருள் வாங்குவது என் வேலை அல்ல, சார்!"

"உன்.. ஓ, அதிகப்படி வேலை என்று பார்க்கிறாயா? அதற்குத் தனியாக..."

"ஐயோ, அப்படியில்லை சார்," என்று அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சொன்னாள் அவள். தொடர்ந்து, "இங்கே கிட்டத்தட்ட கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவள் நான். பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவதை நிர்வாகிகளும், தலைமை விற்பனைப் பொறுப்பாளர்களும் செய்து வருகிறார்கள். இதில் என் தலையீட்டை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" என்று விளக்கினாள்.

"சொல்வது நான். செய்வது நீ. இதில் என்னிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் அவர்கள் என்ன ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும்?" என்றான் அவன் சற்று அழுத்தமான குரலில்.

"அது சரி, சார். நீங்கள் முதலாளியாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவீர்கள். அப்புறம், நாள் பூராவும் இங்கே அவர்களோடு கூட இருந்து பணிபுரியப் போவது நான் அல்லவா? சும்மாவே, இது விஷயமாக என் மீது ஏற்கனவே கோபம் இருக்கிறது. இதைச் செய்தேன் என்றால், அப்புறம் பெரும் பிரச்சனையாகி விடும். வேண்டாம் சார்," என்றாள் அவள் கவலையுடன்.


"அப்படியே பார்த்தாலும், இந்த அறையில் வைத்து நீ தேர்ந்தெடுப்பது யாருக்குத் தெரியப் போகிறது?"

"இரண்டும் இரண்டும் நாலு சார். இங்கே நான் வந்து போனதும், நீங்கள் ஆர்டர் கொடுத்தால், தெரியாதா? இப்போதுதானே சார், பேசினோம். உங்கள் கதையை நீங்களோ, உங்கள் பாட்டியோ சொல்லியா எல்லோருக்கும் தெரிந்தது?"

"என் கதை. என்னைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? என் கதை என்று எல்லோரும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" என்று கசந்த குரலில், ஒரு கரகரப்புடன் கேட்டான் புவனேந்திரன்.

"நடந்ததைத்தான்! உங்கள் அம்மாவை மணந்ததற்காக, உங்கள் அப்பாவும் சேர்ந்து வீட்டை விட்டுப் போனது. உங்கள் பெற்றோர் இருவரும் விபத்தில்... விபத்தில் மறைந்தது. உங்கள் பாட்டி அழைத்த போது, நீங்கள் வர மறுத்தது. கடைசியாக மரணப் படுக்கையில், உங்களிடம் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டுப் பாட்டி போனது. இப்படி எல்லாமே, எல்லோருக்குமே தெரியும் சார்!"

"ஓ..." என்று சற்று நேரம் பேசாதிருந்தான் அவன்.

பிரச்சனையின் தீவிரத்தில், அவன் தன்னை மறந்து விட்டானோ என்று கூட நளினிக்குத் தோன்றியது. "சார்..." என்று மெல்ல அழைத்து, "உங்கள் விருப்பத்தைச் சொன்னால், வழக்கமாகச் செய்கிறவர்களே, உங்கள் சொல்படியே தேர்ந்தெடுக்கக் கூடும், சார்," என்றாள் அவள் மெதுவாக.

மேஜையிலிருந்து பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தான் புவனேந்திரன்.

தலையை உலுக்கிக் கொண்டு, "இல்லை, அது சரிவராது. சொல்படி என்பது வேறு. விருப்பம் போல என்பது வேறு. அத்தோடு, நீ குறிப்பிட்டவர்கள் எல்லோருமே, குறைந்த பட்சமாக ஒரு தலைமுறை மூத்தவர்கள். இரண்டு தலைமுறை மூத்த பாட்டிக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட கருத்தில், ஆண்டுக் கணக்கில் ஊறிப் போனவர்கள். அதைத் தாண்டி வந்து, அவர்கள் நம் வழியில் யோசிப்பது கடினம். மேலும் இந்த விஷயத்தில், எனக்கு உன் மீதுதான் நம்பிக்கை. இந்த அலுவலகம் இல்லை என்றால், வேறு எங்கேயேனும்... என் இடத்துக்கு உன்னை அழைத்துப் போவதும் பயன் இராது. அங்கே உள்ள பணியாட்களுக்கு, இங்கே தொடர்பு இருக்கிறது. காபி ஷாப் மாதிரி இடங்களில் உட்கார்ந்து, அரை மணி நேரத்தில் முடிக்கிற வேலையும், இது அல்ல. என்ன செய்வது என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?" என்று கேட்டான் அவன்.

இந்தத் திட்டத்தை ஏற்றால், பல லட்சங்கள் முதலீடு போட வேண்டிய புவனேந்திரனுக்குத் தன் மீது இவ்வளவு நம்பிக்கை இருப்பது, நளினிக்குப் பெருமையாக இருந்தது. அத்தோடு, இங்கே வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து, அவள் வெகுவாக முயன்று, பயனில்லை என்று ஆற்றாமையோடு விட்ட ஒன்று நடக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியும் நிறையவே இருந்தது.

இவ்வளவுக்கு வந்து, உப்புப் பெறாத சின்னக் காரணங்களால் கெட்டு விடக் கூடாதே.

எனவே அவசரமாக யோசித்து, "சார், உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்பவும் முன்னாலேயே கட்டப்பட்ட ஃப்ளாட் என்பதால், வீட்டுக்கு முன்புறம் வராந்த விசாலமாக இருக்கும். அங்கேயே, பிரம்பு சோஃபா செட்டெல்லாம் போட்டிருப்போம். அங்கே, உட்கார்ந்து வேலை செய்யலாம். நானே, அங்கே அமர்ந்துதான், என் துணி வேலைகளைச் செய்வது. எங்கள் வீடு, கடைசி ஃப்ளாட் என்பதால், வேறு யாரும் போய் வந்து இடையூறாகவும் இருக்காது. என் அம்மா, அப்பா, தங்கைதான். தங்கை பிளஸ் டூ. அவள் பாடத்திலேயே மூழ்கிக் கிடப்பாள். அம்மா உதவியாகவே இருப்பார்கள்," என்று வேகமாகச் சொன்னாள் அவள்.

"அதாவது, வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்துகிறாய்," என்று சிரித்த போதும், "இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. எதற்கும் உன் தந்தை வீட்டில் இருக்கும் நேரம் சொல்லு. நான் வந்து, அவரிடம் நேரில் அனுமதி கேட்டு, அதன் பிறகு வேலையைத் தொடங்குவோம்," என்றான் புவனேந்திரன்.

அவ்வளவு பெரிய மனிதன், முதலாளி என்ற பந்தா காட்டாமல் பெற்றவரின் உரிமையை மதிக்கிறான் என்பதே, சுதர்சனத்துக்கு அவனிடம் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்த, அவரும் சம்மதித்தார்.

இப்படித்தான் புவனேந்திரன் நளினியின் வீட்டுக்கு வந்தது.

அவன் வருமுன், அவனுடைய பாதுகாவலர்கள் வந்து, வீட்டைச் சுற்றிப் பார்த்தது, நளினி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது பற்றித் தாயிடம் விளக்கம் சொல்லுகையில், அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஆனால், அவன் இனிமையாகப் பேசித் தந்தையிடம் அனுமதி பெற்ற விதமும், தொடர்ந்து அவனோடு சேர்ந்து செய்த வேலையும், இடையிடையே கலகலப்பாக நடந்த பேச்சும் அவள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கவே, இந்த எரிச்சல் மறந்து போயிற்று.

புவனேந்திரன் வாரா வாரம் சென்னைக்கு வர, வேலையும் வெகு முனைப்பாக நடக்க, நளினியும் அவனது வரவை மிகவும் ஆவலோடும் ஆனந்தத்தோடும் எதிர்பார்க்கலானாள்.

மூன்று வாரங்கள் இப்படிக் கழிய, நாலாவது வாரம், புவனேந்திரன் சென்னைக்கு வந்தபோது, மாலையில் அவனது வரவுக்காக அவள் வீட்டில் காத்திருக்கையில், வாயிலில் வந்து நின்ற சிறு காரிலிருந்து புதியவன் ஒருவன் இறங்கி வந்து, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதம் கொண்டு வரும் கோகுல், துணிகள் விஷயத்தில் வல்லுனன் என்றும், கடைக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுப்பதில், தனக்கு அளித்த ஒத்துழைப்பை, நளினி கோகுலுக்கும் அளிப்பாள் என்று நம்புவதாகவும், அதில் புவனேந்திரன் எழுதியிருந்தான்.

புவனேந்திரன் தன் முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல உணர்ந்தாள் நளினி.
Back to top Go down
Fathima hassan
Moderators



Posts : 5
Join date : 2010-09-22

காக்கும் இமை நானுனக்கு Empty
PostSubject: Re: காக்கும் இமை நானுனக்கு   காக்கும் இமை நானுனக்கு EmptyMon Sep 27, 2010 9:17 pm

ஏதோ ஒரு வகையில், புவனேந்திரன் தன்னை அவமதித்து விலக்கி விட்டாற்போல உணர்ந்து, நளினி தவிக்கக் காரணம் இருந்தது.

அவன் வந்த அந்த மூன்று வாரங்களில், முதல் வாரம் மட்டும்தான், அவன் வார நாட்களில் மட்டுமாக வந்தது. மற்ற இரு முறையும், வியாழன் அல்லது வெள்ளியன்று வந்து, ஞாயிறு முடியச் சென்னையிலேயே இருந்துவிட்டுப் போனான்.

வார நாட்களில், மதிய உணவு இடைவேளைகளில், வேலை செய்தனர். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை தொடங்கி, மாலை வரை வேலை நடந்தது.

சின்ன வயதாகத் தோன்றுகிறானே, மெய்யாகவே, வேலை தான் இவனது நோக்கமா என்று சற்றுக் கவலைப்பட்ட சகுந்தலா கூட, வேலை நடந்த வேகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

இடையிடையே, காபி, குளிர் பானம் ஏதாவது கொணர்ந்து வைப்பாள். முறுக்கு, தட்டை என்று ஒரு சிற்றுண்டி அடுத்து வந்தது.

வெறும் நன்றி கூறி உண்டுவிட்டுப் போகாமல், புவனேந்திரன் சகுந்தலாவிடமும் அபிப்பிராயம் கேட்பான்.

கூடவே ஒரு பாராட்டும் இருக்கும்.

"'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு சிறு உப்புக்கல் கூட அதிகமோ, குறைவோ இல்லாமல், இப்படி ருசியாகச் செய்து தந்தால், இந்த உயிர் இன்னொரு பிறவி எடுக்கும் போது கூட, இந்தச் சுவையை மறக்காது, ஆன்ட்டி!" என்று அவன் கூறுகையில், சகுந்தலாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

"இப்போதெல்லாம் உப்புத் தூள் தான். உப்புக் கல்லே கிடையாது," என்று மடக்கிய போதும், அந்த 'உப்புக் கல்' என்ற வார்த்தையில் நளினியின் மனம் இதமாகக் குறுகுறுக்கும்.

உப்புக்கல் என்ற வார்த்தையை வேண்டும் என்றுதான், புவனன் சொன்னானா? சொல்லும்போது, லேசாக அவளைப் பார்த்தானா?

ஞாயிற்றுக் கிழமைகளில், சேர்ந்து சாப்பிட அழைத்த போது, மறுக்காமல் அவர்களோடு அமர்ந்து ரசித்து உண்டான். அடுத்த வேளைக்கு பீட்சா, சான்ட்விச் என்று எல்லோருக்குமாக வரவழைத்தான்.

"ஐயோ, நான் பிளஸ் டூ படிக்கிறேனாக்கும்! எனக்கெல்லாம் யாரிடமும் பேச நேரமே கிடையாது!" என்று புருவத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மஞ்சரியைக் கூட, உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேச வைத்தான்.

மொத்தத்தில் முதுகை ஒடிக்கிற அளவுக்கு வேலையும் நடந்தது. கூடவே தன் வீட்டாரோடு அவன் இணைந்து பழகிய விதத்தில், நளினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கடைசித் தடவை புவனேந்திரன் வந்த போது அந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் அதிகமாகக் காட்டி விட்டாளோ?

காட்டி விட்டாளோ என்ன? காட்டத்தான் செய்தாள். ஒருவரின் வரவு சந்தோஷமாக இருக்கும் போது, அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிலும், அந்த நபர் அவள் வீட்டு விருந்தாளியாக வரும்போது?

அவள் சிரித்துக் கொண்டே, "லட்சம் நல்வரவு!" என்ற போது, புவனேந்திரன் பதிலுக்குச் சிரித்தபடிதான் உள்ளே வந்ததாக, அவள் அப்போது நினைத்தாள்.

ஆனால், சற்றுத் திகைத்து நின்று விட்டு, அதன் பின்னர் சமாளித்துச் சிரித்தானோ என்று இப்போது யோசித்துப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

ஏன்? ஒருவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்பதில் கூடத் திகைப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் ஒன்றும் அவனுடைய விரோதி இல்லையே.

மனம் எரிமலையின் மடியாய்க் குழம்பிக் குமுறிய போதும், பெற்ற தாயிடம் கூட, அவளால் அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"புவனேந்திரன் சாருக்கு வேறு நிறைய வேலை இருக்கிறதாம்மா! அதனால், இந்த வேலையை இவரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம்," என்று அறிமுகம் வேறு செய்து வைக்க வேண்டியிருந்தது.

அவளை விட ஓரிரு ஆண்டுகளே மூத்தவனான கோகுல், உடைத் தயாரிப்புக் கலையில் பெரும் பட்டங்கள் வாங்கியிருந்தான். புவனேந்திரன் எழுதியிருந்த மாதிரி, வல்லுனனாகவும் இருந்தான்.

அத்தோடு, முன்னேறும் ஆர்வமும் இருந்ததால், அவனோடு வேலை செய்வது, நளினிக்குமே, அறிவுப் பூர்வமாக ஆக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், எந்தெந்தத் துணி வகைகளை எந்தெந்த மாதிரித் தைத்து அணிந்தால், தோற்றம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம், புவனேந்திரனை விடவும், கோகுல் அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்!

அவளை விடவுமே!

கோகுலோடு வேலை செய்யத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே நளினி இதைப் புரிந்து கொண்டாள். எனவே, மெய்யாகவே, செய்யும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காகவே, புவனேந்திரன் இந்தக் கோகுலை அனுப்பியிருக்கிறான் என்று, நளினி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால், இது பற்றி 'உன்னதம்' வளாகத்தில், புவனேந்திரன் தன்னை அழைத்துச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து மாலையில் வேலைக்குச் சென்றவள், ரொம்பவே ஏமாந்து போனாள்.

அவனாக அவளை அழையாதது மட்டுமின்றி, அவளாக முயன்ற போதும், புவனேந்திரனை அவளால் சந்திக்க முடியவில்லை.

மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று அந்த முறை அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் இதுவே தொடரவும், புவனேந்திரன் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குகிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போயிற்று.

ஏன் ஏன் என்று பல்லாயிரம் முறை யோசித்து மனதை புண்ணாக்கிக் கொண்டாளே தவிர, அந்த ஒதுக்கத்தின் காரணத்தை அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

போகிறான் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல் மிகவும் வேதனையாக இருந்தது.

அவ்வளவு தூரம் சகஜமாக, குடும்பத்துடனேயே சேர்ந்து அமர்ந்து உண்டு, பேசிச் சிரித்துப் பழகிவிட்டு, இப்போது பெரிய முதலாளியாக, ஒரு கடைநிலைப் பணியாளைப் போலப் புவனேந்திரன் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால், அவளது வீட்டுக்குப் புவனேந்திரன் வந்து, 'ஆன்ட்டி, அங்கிள்!' என்று அவளுடைய பெற்றோருடன் ஓர் உறவினனைப் போலப் பழகியது எல்லாம், அவனது வேலை நன்கு நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா?

அவனது இடத்துக்குத் தகுதியுள்ள இன்னோர் ஆள் கிடைத்ததும், அப்படியே ஒதுங்கிக் கொண்டு விடுவானா?

எப்படி முடியும்?

அவனும் சந்தோஷமாகத்தானே பேசிச் சிரித்தான்?

அந்த சந்தோஷத்துக்காக, அவளைப் போல, அவனது மனமும் ஏங்காதா?

ஆனால், அவனுக்கெல்லாம் மனம் ஒன்று இருந்தால் தானே, ஏங்குவதற்கு?

முதலாளி அல்லவா? கொஞ்சம் சிரித்துப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலே, முழு மூச்சுடன் வேலை செய்வாள் என்று கணக்கிட்டிருக்கிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, இரவு தூக்கத்தில் கூட, வண்ணங்கள், வடிவமைப்புகள், துணி வகைகளைப் பற்றியே யோசித்து யோசித்து வடிவமைத்தது அவளது முட்டாள்தனமே தவிர, அதில் அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

இந்தக் குமுறலின் ஊடே, நளினிக்குக் கோபமும் வந்தது.

அவளது வீடு என்ன, 'உன்னத'த்தின் கிளையா? அல்லது, புவனேந்திரன் அதற்குத் தனியாக வாடகை கொடுக்கிறானா? என்ன உரிமையில், அவளது வீட்டில் இந்த வேலையைச் செய்வது?

வேறு இடம் சரியாக இல்லையே என்று, ஏதோ, அவளாகத்தான் ஓர் இளக்கத்தில் இந்த ஐடியா சொன்னாள். ஆனால், அதுதான் சாக்கு என்று, அதையே நிரந்தரமாக்கி விடுவதா?

அடுத்த முறை அவன் வரும்போது, இந்த விஷயம் பற்றிப் புவனேந்திரனிடம் காரசாரமாக இல்லாவிட்டாலும், கறாராகப் பேசிவிட வேண்டும் என்று நளினி முடிவெடுத்த போது, ஒரு நாள் காலையில், நளினி வேலைக்குக் கிளம்பு முன்பாக கூரியரில் அவளுக்கு ஒரு கடிதமும், அவளுடைய தந்தைக்கு ஒரு பெரிய பார்சலும் வந்தன.

இரண்டையுமே அனுப்பியது புவனேந்திரன் தான்.

பெரிய பார்சலை அவசரமாகப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவும், சுதர்சனமும் வியந்து நின்றனர்.

சென்னை 'பூம்புகா'ரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில், ஒரு பெரிய சூரியச் சக்கரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு விலையைக் கேட்டுவிட்டு, மிரண்டு போய் ஓடியே வந்து விட்டதாக, ஒரு தரம் நகைச்சுவை ததும்ப, அவர்கள் இருவரும் புவனேந்திரனிடம் விவரித்திருந்தனர்.

அதே சூரியச் சக்கரம் தான் பார்சலுக்குள் இருந்தது. கூடவே ஒரு சிறு கடிதமும்.

'உன்னத'த்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாறுதலைச் செய்யப் பல்வேறு உதவிகளை அன்போடு செய்ததற்காகத் தனது நன்றியை இந்தச் சிறு அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்வதாகப் புவனேந்திரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த உதவிக்கு, நேரில் வந்து நன்றி தெரிவிப்பதுதான் முறையாகும். ஆனால், கடை வளாகத்தில் சில மாற்றங்கள் செய்வதால், வேலை மிகுதி. அதனால் நேரில் வர முடியவில்லை என்று, ஒரு காரணத்தையும், அந்தப் பெரிய தலைமுறை ஏற்கும் விதமாக அவன் பதவிசாகவே எழுதியிருந்தான்.

சகுந்தலாவுக்கு மனம் உருகிப் போயிற்று.

"அருமையான மனிதர். இப்படி ஒரு பாஸ் கிடைத்தது, உன் அதிருஷ்டம்," என்றார் தந்தையும்.

"உனக்கு என்ன எழுதியிருக்கிறார்? இதே போலவா?" என்று இருவரும் கேட்க, நளினி தனக்கு வந்த கடிதத்தை நீட்டினாள்.

அவளுக்கும் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சில விவரங்களும்.

மாற்றம் குறித்து 'உன்னத'த்துடைய நிர்வாகிகளுக்கு அறிவித்து விட்டதாலும், அலுவலகத்திலேயே இந்தத் தேர்ந்தெடுக்கும் வேலைகளைச் செய்யத் தனியிடம் ஒன்று ஒதுக்கியிருப்பதாலும், கோகுலும், நளினியும் அங்கேயே சேர்ந்தமர்ந்து, இதே பணியை வெளிப்படையாகச் செய்யலாம் என்று தகவல் இருந்தது.

இந்த வேலை மாற்றம், நளினிக்கு ஒரு பதவி உயர்வாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

கூடவே, அதுவரையிலும் அவள் செய்த அதிகப்படி வேலைக்காக, ஒரு கணிசமான தொகைக்கான ஒரு காசோலையும்.

பதவி உயர்வு, பரிசு என்று பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரிக்க, எதையும் ஒத்துக் கொள்ளப் பிடிக்காமல், அதே சமயம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல், நளினி உள்ளூரக் குமுறினாள்.

காட்டிக் கொள்வது இருக்கட்டும், அவளுக்கே, தான் என்ன விரும்புகிறோம் என்று தெளிவாகப் புரியாத நிலை.

பணம் கொடுத்து, ஒரு வல்லுனனின் உழைப்பை வாங்கக் கூடிய நிலையில் உள்ளவன், அவனது மற்ற வேலைகளுக்கு இடையில், இதையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், புவனேந்திரன் இப்படித் திடுமென வெட்டிக் கொண்டது, அவளுக்குப் பிடிக்கவில்லை.

அத்தோடு, அவள் செய்த உதவிக்கு அவன் விலை போட்டுப் பணம் அனுப்பியது, என்னவோ, அவளை அவமானப்படுத்தி விட்டது போல, அவளுக்கு ஆத்திர மூட்டியது.

அவள் என்ன, பணத்துக்காகவா இந்த அதிகப்படி வேலையைச் செய்தாள்?

எண்ணப் போக்கில் தொடர்ந்து, 'பின்னே எதற்காகச் செய்தாள்' என்ற கேள்வி தோன்றவும், அவளுக்கே ஒன்றும் புரியாது போயிற்று.

அவனிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறவள், அவள் செய்த அதிகப்படி வேலை, பணம், பதவி உயர்வு, இதற்காகவெல்லாம் இல்லை என்றால் வேறு எதற்கு?

என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் குழப்ப நிலையிலேயே, மேலும் இரு மாதங்கள் கடந்து போயின.

இந்த அறுபது நாட்களுமே, புவனேந்திரனை அவள் பார்க்கவே இல்லை.

வளாகத்துக்கு அவன் நேரில் வந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால், அவன் நேரில் வராவிட்டாலும், 'உன்னத'த்தில் பல மாற்றங்கள் நிகழலாயின.

ஜவுளிப் பகுதியைப் போலவே, வளாகத்தின் எல்லாத் துறைகளிலுமே, இந்த மாற்றம் அமலாக்கம் செய்யப்பட்டது.

மதியம் கடையை மூடுவது நிறுத்தப்பட்டது.

இந்த மாற்றங்களைத் தாங்கிய விளம்பரங்கள், பெரிய பத்திரிகைகளில் வெளியாயின.

இந்த மாற்றங்கள் பிடிக்காதவர்களும், அதுபற்றி, உரக்கப் பேசப் பயப்பட்டார்கள். சின்னப் பயல் என்று எண்ணப்பட்டவன், எங்கேயோ இருந்து கொண்டு, இங்கே இப்படி ஆட்டி வைக்கிறானே, இவனது காதுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ என்று அஞ்சினார்கள்.

அதற்கேற்ப, புதிதாகப் பலர் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைவருமே, புவனேந்திரனால், நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டார்கள். கோகுலைப் போல!

பூவலிங்கத்தின் தலைமையில் மேலும் பலர் சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால், அது மிகவும் அவசியமாகவும் ஆயிற்று.

ஒரு காலத்தில் நளினி விரும்பிய விதமாகத்தான், வளாகக் கடைகள் 'ஜே ஜே' என்று நடந்தன. ஆனால், அதைப் பார்த்து மகிழ முடியாமல், அவளது மனதுதான் ஏனோ வெறுமையாக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த வெறுமை கூடிற்றே தவிர, ஒரு சிறிதும் குறைவதாக இல்லை.

எரிச்சலுற்றவளாய், அன்று இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, நளினி 'உன்னத'த்தை விட்டுச் சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

ஆனால், வீட்டை நெருங்குகையில் அதுவும் பிடிக்கவில்லை.

ஏன் சீக்கிரம் வந்தாய்? உடம்புக்கு என்ன? குளிரா? காய்ச்சலா? என்ன என்று அன்னை ஆயிரம் கேள்விகளால், அவளைத் திணறடித்து விடுவாள்.

வீடு போகிற வழியில், சற்று நேரம் கடைகளில் சுற்றி விட்டு, மெல்ல வீட்டுக்கு நடந்து சென்றாள்.

வீடு இருக்கும் தெருவுக்குள் புகும்போது, அவளது வீட்டுப் பகுதியில் இருந்து, ஒரு பெரிய நீளக் கார், தெருவின் மறுமுனையில் வளைந்து திரும்பியது.

இது புவனேந்திரனின் கார் போலத் தெரிகிறதே, வீட்டுக்கு வந்திருப்பானோ? அவன் வருகிற நேரம் அவள் வீட்டில் இல்லாமல் போய் விட்டாளே!

பரபரப்போடு, ஓட்டமும் நடையுமாக, அவள் வீட்டுக்கு விரைந்தாள். அங்கே அவளுக்கு மேலாகப் படபடப்புடன், அவளுடைய தாயார் இருந்தாள்.

தந்தையும் கூட!

மகளைப் பார்த்ததும், சற்றே அதிர்ந்தாற் போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பெற்றோர் இருவருமே அவளைத் திகைத்து நோக்கியது, நளினிக்கு வியப்பாக இருந்தது.

பொதுவாகக் குடும்ப அங்கத்தினருள் ஒளிவு மறைவு பழக்கமில்லை. அவசியம் இல்லாதது. அவசியமற்ற வீண் வேதனை என்று தோன்றிச் சொல்லாமல் விடுவது தவிர, எல்லாவற்றையும் கலந்து பேசி விடுவதுதான் வழக்கம். ஏதாவது குழப்பம் என்றாலும், நேரடியாகக் கேட்டு விடுவது தான்.

பெரியவர்களாகப் பேசட்டும் என்று சற்றுப் பொறுத்திருக்க முயன்றால், நளினிக்கு வினாடி யுகமாகத் தோன்றியது.

அது புவனேந்திரனின் கார் தானா, இல்லையா?

அவனது கார் தான் என்றால், அதில் அவனே தான் வந்தானா?

அவள் இல்லாத நேரத்தில் வந்து, அவளுக்குத் தெரியாமல், அவளுடைய பெற்றோரிடம் என்ன சொல்லியிருப்பான்?

ஓர் அரை நிமிஷ நேரம் கூடப் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல், "என்னம்மா விஷயம்?" என்று கேட்டு விட்டாள் அவள்.

மீண்டும் பெற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவும், பொறுமையிழந்து, "அப்பா, ப்ளீஸ்! எதையும் மறைக்காமல், என்னிடம் சொல்லுங்க. நம் வீட்டுக்குப் புவனேந்திரன் வந்தாரா? அவரது காரைப் பார்த்தேனே, என்னவாம்? என்னை... என்னைப் பற்றி, ஏதேனும் சொன்னாரா? இப்படி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது போதும். தயவு பண்ணி விஷயத்தைச் சீக்கிரமாகச் சொல்லுங்கள்... இ...இல்லாவிட்டால், இந்த இறுக்கம் தாளாமல், என் தலையே வெடித்துவிடும்." கெஞ்சுதலாக வற்புறுத்திக் கேட்டாள்.

அப்போதும் கணவனும் மனைவியும் அடுத்தவர் முகத்தைப் பார்க்கவும், கோபமும், கூடவே பயமும் தோன்ற, "போதும்பா! அதுதான் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, இன்னமும் என்ன? முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அப்புறமாக உங்கள் பார்வையைத் தொடருங்கள். நீங்கள் இப்படிப் பதில் சொல்லாமல் தயங்கத் தயங்க, எனக்கு என்னவோ ஒரு மாதிரிப் பயமாக இருக்கிறதே!" என்று சற்றுத் தீனமான குரலில் முடித்தாள்.

மகள் கலங்குகிறாள் என்று அறிந்ததும், "பயப்பட ஒன்றும் இல்லை, பாப்பா," என்று பெற்றவர்கள் இருவரும் கோரசாக இயம்பினர்.

"பின்னே?"

நளினி கேள்வியாக நோக்கவும், "மெய்யாகவே பயப்பட ஒன்றுமே கிடையாதுதான். ஆனால், நாம் எதிர்பார்த்திராத சில விஷயங்களைப் பற்றித் திடுமெனக் கேட்கும் போது, சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது?" என்றார் சுதர்சனம்.

"அப்படி என்ன எதிர்பாராத விஷயம், இப்போது தெரிய வந்தது?"

"முதலில் உட்கார். பேசுவோம். ஏனென்றால், இது உனக்குத் தெரிந்திருக்க வேண்டிய விவரம்," என்று தொடங்கி, "நம் புவனேந்திரன் திருமணம் ஆனவர். உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"கல்யாணம் ஆகி..." என்று பெற்றவர் மேலே சொன்னது எதுவும் காதில் விழாமல், நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

திருமணம் ஆனவன். ஏன் ஆகியிருக்கக் கூடாது? கிட்டத்தட்ட முப்பதைக் கூட எட்டாத வயது. தோற்றம் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வளம் இருக்கிறது. பெண் வீட்டார் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன?

அவனுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் கூட இருக்கக் கூடும். இயல்புதானே?

இதில், நளினி இவ்வளவு அதிர்ச்சி அடையவோ, வருத்தப் படவோ என்ன இருக்கிறது?

ஆனால், வயிறு காலியான உணர்வுடன் நெஞ்சை அடைத்து, கண்ணை இருட்டி, அவள் மயக்கமடைந்து கீழே விழாமல் இருந்ததே அதிசயம்தான்.

அந்த அளவுக்கல்லவா அதிர்ந்து போனாள்!

ஆனால், ஏன்?

யாரோ ஒருவன், அவன் முதலாளியாகவே இருந்தாலும், அவனது திருமணம் அவளை இந்த அளவுக்குப் பாதிப்பானேன்?

கேட்பானேன்? உண்மைதான். துலாம்பரமாக விளங்கிற்றே.

"கடவுளே! நான் புவனனை நேசிக்கிறேன். அதனால்தான்..."

"என்ன?" என்று பெற்றோரின் அதிர்ந்த குரல்களைக் கேட்ட பிறகுதான், தன் மனது எண்ணியதை வாய் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது என்பது, நளினிக்கே புரிந்தது.

என்ன மடத்தனம். நியாய அநியாயங்களைப் பற்றி, அவளுக்குத் தெளிவாகப் போதித்திருக்கும் நல்லவர்களான இந்தப் பெற்றோர், அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

கவலையும், வேதனையுமாக அவர்களைப் பார்த்து, "ஆனால், புவனேந்திரனோடு, நான் அப்படி ஏதும் பழகியது கிடையாதும்மா. என் மனதில் மட்டும் தான்... ஆனால், அவருக்கு மனைவி இருப்பது, எனக்குத் தெரியாதும்மா. யா...யாருமே சொன்னதே இல்லை. சொ...சொல்லியிருந்தால்..." என்று உள்ளிருந்த வலியில் மேலே பேச முடியாமல் நிறுத்தினாள், அவள்.

"மனைவி இருந்தால்தானே..." என்று தொடங்கிய கணவனை விழித்து நோக்கிவிட்டு, "பார் கண்ணு, புவனேந்திரனின் திருமணமே ஒரு பரிதாபமான கதை. இருபத்தோரு வயதிலேயே மணந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மணமாகிப் பத்தே நாட்களில், அந்தப் புது மனைவியைப் பறிகொடுத்தும் இருக்கிறார். பாட்டியிடம் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லாததால், திருமணம் பற்றி, முதலில் இங்கே தெரிவிக்கவே தோன்றவில்லையாம். பிறகு, அவளே போய்விட்ட பிறகு, தெரிவிக்கும் அவசியமே இல்லாது போயிற்றாம். இப்போது..." என்று சகுந்தலா தயங்கினாள்.

மணமாகிப் பத்தே நாட்களில், புது மனைவியைப் பறிகொடுத்திருக்கிறானே, பாவம் என்று உருகிக் கொண்டிருந்தவளுக்குத் தாயின் தயக்கம் மனதில் பட்டது.

பெற்றோரை மாறி மாறிக் கூர்ந்து பார்த்து, "இப்போது மட்டும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிலும், இங்கே வந்து, உங்களிடம்?" என்று கேட்டாள் நளினி.

சகுந்தலா மேலும் தயங்க, "மிஸ்டர் புவனேந்திரனுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம். அதனால், தன்னைப் பற்றிய விவரம் முழுவதையும் எங்களிடம் தெரிவித்து விடுவதுதான் நியாயம் என்று, இங்கே வந்து சொல்லியிருக்கிறார். உன்னிடமும் சொல்லச் சொன்னார். சொல்லி, நன்கு யோசித்து ஒரு முடிவெடுக்குமாறு கூறினார்," என்று ஒரு கணம் நிறுத்திவிட்டுச் சுதர்சனமே தொடர்ந்தார்.

"அம்மா, நீ உலகம் தெரியாத முட்டாளில்லை. உன்னை நாங்கள் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கவும் இல்லை. புவனேந்திரனின் வளம், வசதி பற்றி, உனக்கே தெரியும். நாம் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சம்பந்தம், இது. ஆனால், அவரிடம் இருக்கும் பணத்துக்காக, அவரை மணந்து கொள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நீயும் அவரை... அவரை நினைத்திருப்பதாகத் தோன்றுவதால்..."

அவரது பேச்சில் இடைமறித்து, "நீங்கள் ஓர் அபிப்பிராயம் தொனிக்கப் பேசாதீர்கள். எதையும், நளினியே யோசித்து முடிவெடுக்கட்டும்," என்றாள் சகுந்தலா.

ஆனால், உடனேயே, "அவரிடம் பணம் இருக்கலாம். ஆனால், என்ன இருந்தாலும், இரண்டாம் தாரம் அல்லவா? நம் பெண் புதுப் பூ! அதை நினைக்கும் போது எனக்கு உறுத்துகிறதே," என்றாள் தொடர்ந்து.

"என்னைச் சொல்லிவிட்டு, இப்போது நீ அபிப்பிராயம் கூறவில்லையா?" என்று மனைவியிடம் பாய்ந்தார் சுதர்சனம்.

"நீங்கள் சொன்னதால் தான் நானும் சொல்ல வேண்டியதாயிற்று," என்றாள் மனைவி பதிலுக்கு.

"என்னத்தைச் சொன்னாய்? பெரிதாக இரண்டாம் தாரம் என்றாயே, இன்றைக்கு எத்தனை பையன்கள் அங்கே இங்கே போகாமல், நல்லபடியாக இருக்கிறார்கள்? அதை என்னவென்று கொள்வது? தப்பான இடங்களுக்குப் போகாத நல்ல பையனாகத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நானே கலங்கிக் கொண்டிருந்தேன். எப்படியும், புவனேந்திரன் நல்ல விதம் என்பது உனக்கும் நிச்சயம்தானே?" என்று சுதர்சனம் கேட்ட போது, சகுந்தலா மறுத்துப் பேசவில்லை.


புவனேந்திரன் அவர்கள் வீட்டிற்கு வந்து, நளினியோடு சேர்ந்து வேலை செய்த போது, அவனது கண்ணியமான நடத்தை குறித்துக் கணவன் மனைவி இருவருமே தனிமையில் பலமுறை பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

பார்வையில் கூடக் கனவான் என்று சகுந்தலாவே சொல்லியிருக்கிறாள்.

ஆனாலும் விடாமல், "அடியாட்கள் மாதிரி, இருவரைக் கூடவே அழைத்துக் கொண்டு அலைவதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது," என்றாள் பெற்றவள்.

"பத்திரிகையில் எத்தனை படிக்கிறாய், தொழிலதிபர் கடத்தல், அது இதென்று. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருப்பதைப் பாராட்டாமல், அசட்டுத் தனமாகக் குறைப்படுகிறாயே."

இருவர் பேச்சையும் அரை குறையாகக் கவனித்தபடி நளினி தனக்குள் யோசித்தாள்.

அவன் சிம்லாவுக்கு அழைத்ததை, அவசியமற்ற பிரச்சனை என்று பெற்றோரிடம் சொல்லாமல் விட்டது நல்லதாயிற்று என்று எண்ணினாள் அவள்.

அது மட்டும் தெரிந்தால், அவன் முகத்திலேயே விழித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அவளை அப்படி அழைத்தவன், மற்றவர்களோடு அப்படிச் சென்றதே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்புறம் என்ன நல்லவன்?

ஆனால், மெய்யும் பொய்யுமாய் உலா வரும் அலுவலக வதந்தியின்படி பார்த்தால், பெண்களிடம் அவன் நெருப்புதான். திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றுதான் பேச்சு! கோகுல் மாதிரிக் கோவையிலிருந்து இங்கு வந்து பணிபுரிகிறவர்கள் கூட, அந்த மாதிரித் தவறாக, அவனைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி இல்லை. சிறு பொறி என்றால் கூடப் பெரு நெருப்பென்று பரவியிருக்குமே! ஒதுங்கிப் போனால் கூட, இது போன்ற விஷயம் என்றால், கூப்பிட்டு வைத்துக் கதையாய்ச் சொல்வார்கள். காவல் பொறுப்பாளர் என்று, கம்பீரமாக ஒதுங்கிப் போகும் பூவலிங்கமே, புவனேந்திரனுடைய பெற்றோர் பற்றி, அவளிடமே சொன்னாரே!

அப்படியானால், அவளிடம் மட்டும் தான், அவன் அப்படியா?

ஆமாம் என்றால்... நளினி சட்டென்று பரபரப்புற்றாள்.

ஒருவேளை, அப்போதே அவனிடம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததோ? உண்மை நேசம் என்று தெரியாமல், வெற்று ஆசை என்று எண்ணிக் கேட்டிருப்பானோ?

அப்படி மட்டும் இருந்தால்...

ஆனால், ஒரு தரம் மணந்தவனுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாதா?

அந்தக் கணத்தில், அவனை மணந்து, அவனோடு வாழ்ந்த அந்தப் பெண்ணின் நினைவில், அவளுக்கு வயிறு காந்தி விட்டது.

சே! பாவம் செத்துப் போனவளைப் பற்றி, என்ன இது என்று, நளினி தன்னைத் தானே கண்டித்து, நேர்ப்படுத்த வேண்டியிருந்தது.

மகளது முகத்தையே பார்த்திருந்தவர்கள் போல, "என்னம்மா?" என்று பெற்றோர் கேட்கவும், சட்டெனச் சுதாரித்தாள் அவள்.

"நா...ன்... எனக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும், அம்மா!" என்றாள். "என் மனமே எனக்கு இப்போதுதான்... இன்னமுமே, ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை. ஏதோ குழப்பமாக... அதனால்... அதனால்..." என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

"அது சரிதானம்மா! வாழ்க்கை முழுவதற்குமான தீர்மானம். இதை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. அதனால, நிதானமா, நல்லது கெட்டது பற்றி நன்கு யோசித்து முடிவு பண்ணு. புவனேந்திரன் கூட, அப்படித்தான் சொன்னார். 'நீங்களும் நளினியுமாகத் தீர யோசித்து முடிவு பண்ணிச் சொல்லுங்கள்,' என்றார். ஆனால் பாவம்! கண்ணில் மட்டும் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது!" என்றார் சுதர்சனம்.

தந்தையின் விருப்பம், நளினிக்கு நன்றாகவே புரிந்தது.
Back to top Go down
Fathima hassan
Moderators



Posts : 5
Join date : 2010-09-22

காக்கும் இமை நானுனக்கு Empty
PostSubject: Re: காக்கும் இமை நானுனக்கு   காக்கும் இமை நானுனக்கு EmptyMon Sep 27, 2010 9:24 pm

தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?


தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?


இரண்டு அன்னியர்களை வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்கிறாய் என்று அதட்டிப் பேசவும் நளினிக்கு மனம் வரவில்லை.

புவனேந்திரனைப் போய் எப்படி அதட்டுவது?

அத்தோடு, அவனது கேள்விக்குரிய பதிலையும், இப்போதே அவளால் கூற முடியாதே! சில விஷயங்களைப் பற்றிப் பேசித் தெளிவு பெற்ற பிறகுதானே, ...குறைந்த பட்சமாய் அவனிடம் ஓர் உறுதியேனும் பெற்ற பிறகல்லவா, அவளால் நிச்சயமாய்ப் பதிலைச் சொல்ல முடியும்?

ஆனால், அதையும் இந்த இரு காவலர்கள்... சகுந்தலாவின் பாஷையில் 'அடியாட்கள்' காது கேட்க, அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது.

எனவே, சிறு தயக்கத்துடன், "நான் உங்களிடம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்!" என்று தாழ்ந்த குரலில், அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல விளம்பினாள்.

"தனியாகத்தானே..." என்று வியப்புடன் தொடங்கியவன் சட்டெனப் புரிந்து, முன்னே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோளைத் தொட்டு, "முத்து, நேற்றுக் கூட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டல் நினைவிருக்கிறது, அல்லவா? அங்கே, காபி ஷாப்புக்குப் போக வேண்டும். உள்ளே போய் விட்டால், பாதுகாப்பான இடம்," என்றான்.

என்ன பாதுகாப்பு என்று எண்ணியபோதும், நளினி ஒன்றும் சொல்லவில்லை. காபி ஷாப் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். ஏனெனில், அவள் பேச விரும்பியவற்றை, அடுத்தவர் அறிய கேட்க முடியாது!

நட்சத்திர ஹோட்டலில் காபி ஷாப்பில் அந்த நேரத்தில் பெரிதாகக் கூட்டம் இல்லைதான். மொத்தம் இருபது பேர் இருந்திருப்பார்கள். ஆனால், அந்த முத்து தன் சகாவோடு, அவர்களோடு கூடவே உள்ளே வந்து, அவர்களையும், நுழை வாயில்களையும் கவனிப்பதற்கு ஏதுவாக, முன்னும் பின்னுமாக, அவர்களுக்கு அடுத்த மேஜைகளில் உட்கார்ந்தது, அவளுக்கு எரிச்சலூட்டியது.

இப்படி இரண்டு பார்வையாளர்களள வைத்துக் கொண்டு, அவர்களால் எப்படித் தங்கு தடையின்றி, தன்னியல்பாகப் பேச முடியும்?

தன் மெய்க்காப்பாளர்களை நளினி பார்ப்பதைக் கவனித்து விட்டு, "முத்துவும், திருமயனும் எப்போதும் கூடவே இருப்பதால், அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக நினைக்க எனக்குத் தோன்றுவது இல்லை," என்றான் புவனேந்திரன்.

"ஆனால், எனக்கு அப்படி எண்ணத் தோன்றவில்லையே," என்றாள் அவள்.

"தோன்ற வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று, முன்பே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். அதனால், இந்த இருவரையும், வாழ்வில் ஓர் நிரந்தர அங்கமாக நினைப்பதற்கு நீ பழகிக் கொள்ள வேண்டும்," என்றவன், தலையசைத்து, "நம்பிக்கைதான். என்றாலும், நீ இன்னமும் முடிவே சொல்லவில்லை. அதற்குள் எங்கே போய்விட்டேன் பார்," என்று லேசாக முறுவலித்தான். "சொல்லு நளினி. ஏதோ பேச வேண்டும் என்றாயே."

நம்பிக்கையா? எப்படி வரும்? அதுவும், கேவலமாக ஒன்று கேட்டு, அதை அவள் மறுத்து... எல்லாம் மறந்து விட்டானா?

அதைப் பற்றி இந்த இருவர் முன் எப்படிக் கேட்பது? ஆனால், கேளாமல் விடவும் முடியாது.

"அது... வந்து சார்..." என்று அவள் ஒருவாறு தொடங்க முயற்சிக்கையில், அவன் குறுக்கிட்டு, "இன்னமும் 'சாரா'?" என்று, மென் குரலில் கேட்டான்.

என்ன குரல்!

தலையை உலுக்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அ... அன்றைக்குப் பூவலிங்கம் சார் வேலைக்காக, சிம்லாவுக்குக் கூட, வந்து, ஏதேதோ கேட்டீங்களே அது... அது காதல்... வந்து, நேசத்தின் அறிகுறி ஆகுமா?" என்று, ஒரு வழியாகக் கேட்டே விட்டாள்.

கண்ணில் பாராட்டோடு, "கெட்டிக்காரத்தனமான கேள்வி. அதாவது, எப்போதிருந்து உன்னை நினைக்கத் தொடங்கினேன் என்று கேட்கிறாய். அப்படித்தானே?" என்று புன்னகை செய்தான்.

அவள் பேசாதிருக்கவும், "எப்போது என்று சொன்னால், உன்னால் நம்பக் கூட முடியாது, நளினி. அது... முதல் பார்வையில் என்று சொல்ல முடியாது. ஆனால், அசட்டுத் தனமாய் வேலையை விட்டு விட்டாயே என்றேனே, நினைவிருக்கிறதா? அப்போது உன் முகபாவம்! அன்றைக்கு என்னால் தூங்கவே முடியவில்லை. தூக்கம் வருவதற்காக, இரண்டு மணி நேரம் நீந்தினேன். ஆறு ஆண்டுகளாக, எந்தப் பெண்ணும் என்னை அப்படிப் பாதித்தது இல்லை. அதுதான், ஒரு வேளை நெருங்கிப் பழகினால், அந்தப் பாதிப்பு மறைந்து விடக்கூடும் என்று எண்ணினேன். ஆனால், நீ மறுத்த போதும் ஏமாற்றம் தோன்றாமல், ஒழுக்கத்தை மதிக்கிறாய் என்று, எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது..." என்றவன், அவளது விரிந்து நோக்கிய விழிகளைக் கண்டு சிரித்தான்.

"உண்மை கண்மணி. ஆனால், அப்போது, இவ்வளவு உறுதியாக நினைக்கவில்லை. உன்னோடு, உன் குடும்பத்தோடு பேசிப் பழகுவது சந்தோஷமாக இருந்தது. என் வரண்ட வாழ்க்கைக்கு அதுவே பெரிய சுகமாக, அதற்கு மேல், அப்போது நான் எதையும் நாடவில்லை. ஆனால், உன் கண்ணில் நேசம் தெரியவும், கலங்கிப் போனேன். நான் பட்ட மரம்! என்மேல், எப்படி...?"

அவன் கலங்கினானோ என்னவோ, நளினி ரொம்பவே திகைத்துப் போனாள்.

இவன் எப்போதோ அவளை அறிந்திருக்கிறான்.

இன்னதென்று அவளே அறியும் முன்பாகவே, அவன் தெரிந்து வைத்திருக்கிறானே.

ஒரு தொழிலதிபனாகப் பல தரத்தாருடன் பேசிப் பழகியதால் வந்த திறமையா? அல்லது... ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருந்ததால் வந்த அனுபவ அறிவா?

தன்னை மீறி, "அவர்களை... உங்கள் மனைவியை மிகவும் நேசித்தீர்களா?" என்று கேட்டாள் நளினி.

சில வினாடிகள், இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லப் போவதில்லையோ என்று நளினிக்குத் தோன்றியது.

ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று கூட!

அவளுக்கு யுகமாகத் தோன்றிய அரை நிமிஷத்துக்குப் பிறகு, மேஜை மேல் வைத்திருந்த கையிலிருந்து, புவனேந்திரன் பார்வையை அவள் முகத்துக்கு உயர்த்தினான்.

அவளது கண்களை நேராகச் சந்தித்து, "உன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, நளினி. அந்தத் திருமணம் நடந்தபோது, எனக்கு இருபத்தோரு வயது. ரதி இருபதை எட்டவில்லை. அந்தப் பத்து நாட்களுக்குள், சிரிப்பு, அழுகை, சச்சரவு, சமாதானம், அன்பு, ஆசை... எல்லாமே எங்களுக்குள் இருந்தது. சந்தோஷமாகவே இருந்தோம். அவள்...அவள் போன பிறகு, உலகமே இருட்டாகிப் போய் விட்ட மாதிரி இருந்தது. என் தொழில்கள், கூடவே, உள்ளூரச் சில பிடிவாதங்களும் இருந்ததால்தான், மீண்டு வந்தேன் எனலாம். உன்னைச் சந்திக்கும் வரையும், பெண்களிடம் வேறு எந்த நினைவும் எனக்கு வந்தது கிடையாது. உன்னைக் கூட, வந்து போகும் மேகத்தைப் போலச் சற்று வலுவான ஒரு சலனம் என்றுதான், முதலில் நினைத்தேன். பிறகு, உன் கண்ணில் ஆர்வத்தைக் கண்ட போதும், 'இந்தப் பட்ட மரத்தோடா?' என்று, ஓடி விடத்தான் முயன்றேன். ஆனால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று இந்த இரண்டு மாதங்களில், ஐயம் திரிபற அறிந்து கொண்டேன்," என்றவன், கை நீட்டி, அவளது கரத்தைப் பற்றினான்.

"இனி, நீதான் சொல்ல வேண்டும்."

இணைந்திருந்த கரங்களின் மீது, நளினியின் பார்வை பதிந்தது.

அவனது வலிய, பெரிய கரம், அதனுள், மெல்லிய நீண்ட விரல்களுடன் அவளது கை. இரண்டும் மிகப் பொருத்தமாக இணைந்திருந்தன.

பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பளிச்சிட்டன.

இமை தாழ்த்தி, அதை மறைத்து, "எப்படிச் சொல்ல வேண்டும்?" என்று வினவினாள் அவள்.

சிறு யோசனையில் சுருங்கிய புருவம் உடனே உயர, "எல்லோரையும் போல, உனக்கும் பிடித்திருக்கிறது என்று வார்த்தைகளால்தான்!" என்று கூறும்போதே, அவன் முகத்தில் ஆவலுடன் கூடிய முறுவல் மலரத் தொடங்கி விட்டது.


ஓரக் கண்ணால் நோக்கி, "இரு மாதங்களுக்கு முன்பாகக் கண்ணில் சேதி படித்தவருக்கு இப்போது படிக்கத் தெரியாதா, என்ன?" என்றபோது, அவளது குரல் கொஞ்சிக் குழைந்தது.

அவனது விழிகள் சட்டெனப் பளபளத்தன.

பார்வையோடு நில்லாமல், "இப்படிப் பொது இடத்துக்கு வந்தது சரியில்லை என்று இப்போது தெரிகிறது!" என்று அவன் கூறவும், அவளது கன்னங்கள் செம்மை பூசின.

ஆனாலும் விடாமல், "என்னைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு எல்லா இடங்களும் ஒன்றுதான்," என்றாள் நளினி.

"நிஜம்?"

"நிச்சயமான நிஜம்," என்று பிடிவாதமாக இயம்பினாலும், கூச்சமும் மிகவே, பார்வையைத் திருப்பியவளின் கண்களில், புன்னகையோடு வாயிலைப் பார்த்த திருமயன் தென்பட்டான்.

இவ்வளவு நேரம், புவனேந்திரனும் அவளும் பேசியது அனைத்தும், இவர்கள் இருவருக்கும் தெளிவாகக் கேட்டிருக்கும்! கேட்டிருக்கிறார்கள்! முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?

அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமான ஓர் இனிய சல்லாபம், இன்னும் இருவரைப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேறியிருக்கிறது.

தொண்டையில் ஏதோ கசப்பாக உணர்ந்தாள் அவள். அசங்கியமாகவும்.

பேச்சுப் போக்கில், அவளே இவர்களை மறந்து போனாளே! ஒரு வேளை, புவனனைப் போலவே, அவளும் ஆகிவிட்டாளா?

அதெப்படி முடியும்?

இப்போதே, புவனேந்திரன் அவளது கையைப் பிடித்ததையும், இந்த இருவரும் பார்த்திருப்பார்கள். இன்னும்...கன்னத்தை வருடுவது, ஒரு சின்ன அணைப்பு, உதட்டிணைப்பு... என்று இதெல்லாம் கூட நடக்கக் கூடும்தானே? அதெல்லாம் தனிமையில் நடப்பதுதானே, இனிமை? அவைகளுக்கும், இவர்களைச் சாட்சியாக வைத்துக் கொள்வது என்றால், நினைக்கவே நெஞ்சு கூசும் அருவருப்பாக இருந்தது அவளுக்கு.

இந்த ஒருதரமே, ஏதோ குழப்பமும் ஆர்வமுமாக, அவள் தன்னை மறந்து இருந்து விட்டாள். ஆனால் இதை நீடிக்க விட முடியாது. நிச்சயமாய்!

பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பவன் புவனேந்திரன். அவனிடம் அவசரப்பட்டுப் பேசிப் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடக் கூடாது, மெல்லத்தான் சொல்ல வேண்டும் என்று இப்போதைக்கு நளினி சும்மா இருந்த போதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில் அவளும் உள்ளூரப் பிடிவாதமாகவே இருந்தாள்.

அத்தோடு, இவர்கள் முன்னிலையிலேயே, அவளது எண்ணத்தைச் சொல்வதும் முடியாதுதானே?

ஆனால், புவனேந்திரன் அருகில் இவர்கள் இல்லாத நேரம் எது என்று யோசித்தவாறு பார்த்தால், குடித்த காஃபிக்கும், கொறித்த முந்திரிப் பருப்புக்கும் பில் வந்திருந்தது.

எப்போது கொண்டு வரச் சொன்னானோ?

"உன் வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம், வா. பாவம், என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்!" என்று பில்லுக்குச் சில நோட்டுகளை வைத்து விட்டுப் புவனேந்திரன் எழுந்தான்.

என்ன கரிசனம்! அத்தையும், மாமாவும் கவலைப் படுவார்களாமே!

அதற்குள் உறவு கொண்டாடத் தொடங்கி விட்டானே!

"என் அப்பா, அம்மா பற்றி, என்னை விடக் கவலைப் படுகிறீர்கள்!" என்றாள் கிண்டலாக.

"பின்னே? உனக்கு அவர்கள் வெறும் பெற்றவர்கள்! ஆனால், எனக்காக அல்லவா, அவர்கள் உன்னைப் பெற்று வளர்த்து வைத்திருக்கிறார்கள்! இந்த நன்றி கூடக் காட்டவில்லை என்றால் எப்படி?" என்றான் அவன் பதிலுக்கு.

"அது சரிதான்! ஆனால், உங்கள் நன்றியை இன்னும் பல..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திருமயன் அருகில் வந்தான்.

"முத்து காரை எடுக்கப் போயிருக்கிறான் சார். எடுத்ததும், செல்லில் கூப்பிடுவான். அப்போது போனால் போதும்! அதுவரை..." என்று, அவர்கள் அருகே நெருங்கி நின்று, கவனத்துடன் சுற்று முற்றும் பார்க்கலானான்.

புவனேந்திரனைப் பாதுகாக்கிறானாம்.

ஒரு சின்ன விதையைப் போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், கெடுத்துவிட்டானே என்று தோன்றிய எரிச்சலை அடக்கிக் கொண்டு, பேசாமல் நின்றாள் நளினி.

வீட்டில் சுதர்சனம், சகுந்தலா இருவருமே இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது.

இனிப்பு எடுத்து வரும் சாக்கில் மகளை உள்ளே அழைத்துப் போய், "அந்த முதல் மனைவியைப் பற்றி... உனக்கு ஒன்றும் இல்லையேம்மா?" என்று சிறு கலக்கத்துடன் பெற்றவள் வினவினாள்.

தாயை நேராக நோக்கி, "அது அவரது கடந்த காலம் அம்மா. நிகழ்காலமும், எதிர்காலமும் நம்முடையதாக இருக்கும் போது, முடிந்து போன ஒன்றைப் பற்றி, நமக்கு என்ன, அம்மா?" என்று நளினி கேட்கவும், தாயின் முகமும் தெளிந்தது.

எப்போதேனும் சில நினைவலைகள் தோன்றி மறையக் கூடுமே தவிர, மற்றப்படி புவனேந்திரனின் முதல் திருமணத்தை முடிந்து போன விஷயமாகத்தான் நளினி நிச்சயமாக நம்பினாள்.

ஆனால், அது அப்படியல்ல, ஒரு விசித்திரமான வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று, அவள் அனுபவித்துத்தான் அறிய நேர்ந்தது.
Back to top Go down
Sponsored content





காக்கும் இமை நானுனக்கு Empty
PostSubject: Re: காக்கும் இமை நானுனக்கு   காக்கும் இமை நானுனக்கு Empty

Back to top Go down
 
காக்கும் இமை நானுனக்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
SPECIAL ARTICLES, POEMS & STORY
 :: நாவல்கள்
-
Jump to: